தமாம் பாலா For Audio Please Click Here
ஆர்ப்பாட்டமாக பூஜை போட்டு ஆரம்பித்த தமிழ் படம், ஆற அமர 2 வருடம் கழித்து வருவது போல, நம்ப ஸா பா தொடரும் ஒரு மாத தொய்வுக்கு பிறகு ரீலீஸ் ஆகிறது. ம்ம்.. எங்கே விட்டோம்?? ஆமா, எதனிக் வில்லேஜ் பக்கத்துலே வந்து.. ஞாபகம் வந்துடுச்சு!
அந்த காட்டாற்று பாலத்தை தாண்டி ஊருக்குள்ளே நுழைந்தோம். ஆற்றங்கரையில் இருந்த ஒரு உணவு விடுதிக்குள் எங்களை அழைத்துச் சென்றாள், எங்கள் கைடு ஜிங். உடன் வந்த ஒட்டுப்புல் தோழிகள் வெளியே நின்று கொண்டார்கள். வெயிலுக்கு இதமாக அவரவர் இஷ்டம் போல குளிர்பானம்/ பீர் என்று ஆளுக்கு ஆள் வாங்கிக் கொண்டோம்.
அந்த உணவு விடுதியை நடத்தும் மனிதரை பார்த்ததும் மிகவும் வியப்பை அடைந்தோம். ஆம், அவர் வியட்னாமியர் அல்ல, அவர் ஒரு நியூஸிலாந்து நாட்டுக்காரர் ; சந்தேகம் இருந்தால், புகைப்படத்தில் பார்த்துக் கொள்ளலாம். நியூஸிலாந்து நாட்டில் பால் வியாபாரத்தொழிலில் இருந்த அந்த ஸ்காட்லாந்துகாரர், விடுமுறைக்கு ஸா பா வந்து விட்டு, அதன் அழகில், அமைதியில் கவரப்பட்டு அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டது அவருடன் பேசி நான் கறந்த தகவல்!
அவரும் ஜிங்கும் சகஜமாக கலாய்த்து ஒருவர் காலை ஒருவர் வாரிக் கொண்டார்கள், பேச்சிலே.
“இந்த வயசான கிழவனை கல்யாணம் செய்து கொள்வாயா? மண்டையை போட்டு விட்டால்,கல்லறைக்கு வந்து அள்ளி போட்டு திட்டுவாயா?” -அவர்
“இல்லை கல்லறையில் பூ போட்டு பாராட்டுவேன்” - இது ஜிங்.
பெரியவரே, போற பேச்சு இப்போ எதுக்கு, நல்லாவே இருங்க என்று சொல்லி விடைபெற்றேன் நான்.
வெளியே வந்து பார்த்தால், என் இலவச இணைப்புப் பெண் இன்னமும் அங்கேயே நின்று கொண்டு, என்னை பார்த்ததும் வந்து கௌரவமான இடைவெளி விட்டு நின்று கொண்டாள். என்னடா இது, எப்படி இவளிடமிருந்து தப்பிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது தான், அவளது தோள் பை கண்ணில் பட்டது. வாட் யூ ஹேவ் என்றவுடன், அவளது நடமாடும் கடையிலிருந்து, துணி வேலைப்பாடுகளை வெளியே எடுத்து விலை சொல்ல ஆரம்பித்தாள். ஒரு வழியாக, அவளிடமிருந்து ஸா பா போஸ்ட் கார்டு புகைப்படங்கள் நிறைந்த ஆல்பம் ஒன்றை வாங்கிக் கொண்டு அவளை அனுப்பி வைத்தேன். 40,000 வியட்நாம் டாங், வெறும் 2 அமெரிக்க டாலருக்காக, மணிக்கணக்காக உடன் நடந்து வந்த அந்த கிராமத்து பெண்ணை நினைக்கையில், கொஞ்சம் மனசு கனக்கவே செய்தது!
ரொம்ப தூரம் நடந்து, நாங்கள் தங்க வேண்டிய வீட்டுக்கு வந்து விட்டோம் ஒரு மேட்டுப்பகுதியில். ஆற்றில் குளிக்கலாம் என்று வழியில் சல்லிசு விலையில் ஷார்ட்ஸ் வாங்கிக் கொண்டோம். ஆற்றில், பாறைகள் நிறைந்த பகுதியில் நாங்கள் தண்ணீரில் இறங்க, ஜிங் கரையில் உட்கார்ந்து கொண்டாள். முன்னே பின்னே முழங்கால் அளவு தண்ணீரில் இறங்காத நான், நண்பர்கள் கொடுத்த தைரியத்தில் ஓடும் ஜில்லு தண்ணியில் இறங்கி ஆட்டம் போட்டு விட்டேன். நான்கு பேர் உடன் இருந்தால், துணிந்து அரசியலில் கூட குதிக்கலாம் என்று தோன்றியது அப்போது.
நாங்கள் தங்கிய அந்த மர வீட்டின் புகைப்படங்களை பாருங்கள், அங்கு தங்கிய அனுபவத்தைப் பற்றி, அடுத்த பதிவில் பேசுவோம், சரியா?
ஸா பா தொடரும்.
1 comment:
Dear Bala Sir,
The Sapa experience is nice and the photos are so beautiful.Cheers Balaji.
Post a Comment