நகர முதலை
தமாம் பாலா
ஆதி அவன் பெயர், மீதி இந்த கதை. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஊரில் பிறந்தவன். எல்கேஜி கான்வெண்டில் படிக்காமல், அரசு உதவி பெற்ற தமிழ்ப்பள்ளியில் ஒண்ணாம் வகுப்பு படித்தவன்.
பின்னாளில் கடல் கடந்து செல்வான் என்றோ, ஒரு நாள் கையை பிசைந்து கொண்டு நிற்பான் என்றோ அவன் நினைத்து பார்க்கவே இல்லை. இன்று அது நடந்தே விட்டது!
"மிஸ்டர் ஆதி... இன்று மாலை, கஸ்டமர் மீட்டிங். பீர் பார்ட்டி உண்டு தயாரா?" வியட்நாமில் என்னடா இது ஆதி மனிதனுக்கு வந்த அக்கினிப் பரிட்சை?
அவன் சற்றே தடுமாறி, "எனக்கு வேற ஆப்ஷன் உண்டா.." " ஓ. இந்தியாவுக்கு ரிட்டன் டிக்கெட்."ஹெச். ஆரின் பேச்சு தமாஷ் இல்லை என அவனுக்கு உறைத்தது.
கோங் ஸே கோங் வெ என்று வியட்நாமில் சொல்வார்கள். போதை தலைக்கு ஏறாமல் போய் சேர மாட்டோம் வீட்டுக்கு என்று பொருள்.
ஒன்று இரண்டு மூன்று என்று சொல்லி சொல்லி, முட்ட முட்ட குடிக்க வேண்டும். கஸ்டமர் மட்டை ஆகி விட்டால் காண்ட்ராக்ட் கையெழுத்தாகி விடும் என்பது இந்த ஊரின் (மூட) நம்பிக்கையில் ஒன்று.
ஆதியும் இன்று ஜோதியில் பரமபதத்தில் கலந்தான். எத்தனை குடித்தோம் என்று நினைவில் இல்லை. முகத்தில் ஒரு கோணல் சிரிப்புடன், சுற்றும் முற்றும் எல்லாம் ஸ்லோ மோஷனில். தட்டுத்தடுமாறி வீடு வந்து சேர்ந்தான்.
அலமாரியில் அவனது திருக்குறள் புத்தகம். கட்டிலில் படுத்து, கையில் எடுத்துப் புரட்டினான். முதல் குறள்.. அகர முதல.. என எழுத்துக்கள் ஓட.. முதல.. முதல..
புத்தகத்தில் இருந்து ஒரு குட்டி பல்லி. தன் வாயை திறந்து. பற்கள் முளைத்து முரட்டு முதலையாகி... அவன் தலையை கபளீகரம் செய்தது!
போதை கனவுகளைத் தாங்கிய ஆதி விடியும் தலைவலி காலை பற்றி அறியாமல் ஒரு குழந்தை போல் தூங்க, முதலை மெல்ல மெல்ல மெலிந்து ஆனது மீண்டும் பல்லிக்குட்டியாய்.
No comments:
Post a Comment