November 2, 2008

தஞ்சையிலிருந்து தமாம் வரை..(தொடர் 11)

தஞ்சையிலிருந்து தமாம் வரை தொடர் 11
தமாம் பாலா

ஆகாஷவாணி, ஸெய்திகள் வாஷிப்பது..

1970ம் வருஷம்னு நினைக்கிறேன், மாதம் சரியா நினைவுலே இல்லை; நானும் அப்பாவும், ராத்திரி நேரத்து, பாதி இருட்டு பாதி தெருவிளக்கு வெளிச்சத்துலே தஞ்சை வடக்குவீதி மிட்டாய் கடை ஸ்டாப் பக்கத்துலே நடந்து போய்கிட்டு இருந்தோம். எதுக்காக போகிறோம்னு அவருக்கு மட்டும்தான் தெரியும். நம்ம எப்பவுமே மாட்டுக்கு பின்னாடி போற கன்னுகுட்டி தானே?

“அப்பா, நாம எங்கே போறோம்?’

“அதுவாடா கண்ணா? நமக்கு லாட்டரிலே கொஞ்சம் பணம் கிடைச்சிருக்கு; அதோட சேர்த்து காசு போட்டு, லைஸன்ஸ் வாங்க போறோம்”

லைஸன்ஸ் அப்படின்னதும், துப்பாக்கி அது இதுன்னு எங்க குடும்பத்தை பத்தி தப்புகணக்கு போட்டுட போறீங்க! கத்தி சண்டை என்ன, வாய் சண்டை கூட சரியா போடத்தெரியாத ‘அக்மார்க்’ தொடைநடுங்கி குடும்பமாக்கும்.. நாங்க!! :))) எங்களுக்கெல்லாம் சேர்த்து சண்டை போடறத்துக்குத்தான், எம்.ஜி.ஆர் இருந்தாரே அன்னைக்கு!

அப்புறம் எதுக்கு லைஸன்ஸ், ஒரே குழப்பமா இருக்கா? அது எங்க குடும்பத்துலே ஒரு புது மெம்பரை சேர்க்கறத்துக்கு. அந்த மெம்பர், பேசும், பாடும், அவ்வப்போது இரைச்சல் கூட போடும். ஆனா எல்லாம் இருந்த இடத்திலேயே தான். அதாலே, ஒரு அடிகூட நடக்க முடியாது.

குரல் மட்டும் குயில் போல இல்லே, பாக்குறத்துக்கும் கருப்பா, காக்கா மாதிரி தான் இருக்கும். கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே..! நீங்க ரொம்ப கெட்டிக்காரர் தான் போங்க :))

(ஐஸ், ஐஸ் நம்பாதீங்க.. பாலா இப்படித்தான் புகழ்ந்தே கவுத்துடுவான்!)

ரேடியோ பொட்டிதான் அது !!!!

இன்னைக்கு நூறு ரூபாய்க்கு சோப்பு பெட்டி மாதிரி சீரழியுது எஃப் எம் ரேடியோ. அந்த ரேடியோ அந்த காலத்துலே.. பெரிய லக்ஸூரி.. ஸ்டேடஸ் ஸிம்பல்!

எங்க பெரியம்மா வீட்டிலே, பெரிய ரேடியோவை பார்த்திருக்கேன். மரப்பெட்டியும் சோபா செட்டும் கலந்தது போல கம்பீரமா இருக்கும். காத்து போகறத்துக்கு உள்ள இடுக்குகள் வழியா பார்த்தாக்க, உள்ளே வால்வுகள் எல்லாம் பல்பு போல எரிஞ்சு கிட்டு இருக்கும். குரல் மட்டும்தான் சிம்ம கர்ஜனைனு இல்ல.. வால்யூம், ஸ்டேஷன் மாத்துற குமிழ்களிலெ கைய வைச்சு திருப்பும் போது, பளீர்னு ஷாக் அடிச்சு பயமுறுத்தும் அந்த ரேடியோ இயந்திரம்!

அப்பா வாங்கின ரேடியோ, சின்னது! ட்ரான்ஸிஸ்டர் வகையை சேர்ந்தது. ரொம்ப நாள் நான், ரேடியோவுக்கு இது சின்ன ஸிஸ்டர், அதாவது தங்கச்சின்னே நினைச்சுகிட்டிருந்தேன். அது ஒரு வகையிலே நிஜம்தான். கூட அக்கா தங்கச்சி, அண்ணன் தம்பி இல்லாத ‘ஓரி பிண்டங்களுக்கு, ரேடியோதான் உடன்பிறப்பு, அந்த காலத்துலே :((

புலி பசித்தாலும் புல்லை தின்னாதுங்கற மாதிரி, சும்மாவே இருந்தாலும் தப்பி தவறிகூட புத்தகம் படிக்கவே கூடாதுன்னு வைராக்கியமா இருந்தார் அப்பா. நானும் அம்மாவும், அதுக்கு நேர் எதிர். மளிகை சாமான் பொட்டலம் கட்டின பேப்பரை கூட விடாமல் பிரிச்சு/படிச்சு மேய்ஞ்சிடுவோம்.

எங்க மூணு பேரையும் ஒண்ணா இணைச்சு வாழ வெச்சது.. அந்த ரேடியோ பொட்டிதான்; அவ்வப்போது பிணக்குகளை உண்டாக்கி வெச்சதும் அதே ரேடியோதான்!

அப்பா பேச்சையும், அம்மா பேச்சையும் கேட்டோமோ இல்லையோ கண்டிப்பா ரேடியோ பேச்சை கேட்டோம்.

அப்பா வீட்டிலே இருந்தா, ரேடியோ நாட்டு நடப்பையும், அரசியலையும் மட்டுமே பேசும். மாலை 6:40க்கு.. மாநிலச்செய்திகள் வாசிப்பது.. செல்வராஜ் அப்படின்னு சூப்பர் வாய்சோட ஒருத்தர் படிப்பார். அவர் முகத்தை ஒரு ராஜா லெவல்லே கற்பனை பண்ணலாம்; ஒரிஜினல் முகம் தெரியாததாலே, அது இன்னும் அப்படியே மெய்ண்டெய்ன் ஆகுது!

ஏழே கால் மணிக்கு, ரேடியோ.. மாநில அரசுகிட்டே இருந்து, ஹைஜாக் ஆகி மத்திய அரசுக்கு போய்டும். “ஆகாஷ வாணி, ஸெய்திகள் வாஷிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி” அப்படின்னு மிரட்டுற மாதிரி ஒரு குரல் கேட்கும். இப்ப வர்ற ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டு மாதிரி, அது ஆம்பிள்ளை குரலா, பொம்பிள்ளை குரலான்னு ஒரே குழப்பமா இருக்கும். நியூஸிலும், ராஷ்ட்ரபதி, நதிநீர் தாவா, ப்ரேரணை, கொறடா எல்லாம் போட்டு தமிழ்தானா இதுன்னு பாதி புரிஞ்சும் புரியாமலும் இருக்கும். கூறினார் அப்படிங்கறதை மட்டும் கோரினார் அப்படின்னு ஸ்பஷ்டமா சொல்லிடுவாங்க.

இப்படியெல்லாம் அழும்பு பண்ற ரேடியோ.. அம்மா கை பட்டால் மட்டும், சமத்து பிள்ளையா மாறிடும். விவித் பாரதி, தேன் கிண்ணம், வண்ணச்சுடர், ஒலிச்சித்திரம், ஆப்கி பர்மாயிஷ், பினாகா கீத் மாலா அப்டின்னு பொழுது போக்கு பூங்காவாவே மாறிடும். (டிவி இல்லாத காலம் அது.. குறைஞ்ச பட்சம் எங்க வீட்டிலையாவது! )

ரேடியோ மோனோவா இருந்தாலும், ஸ்டீரியோ டைப்பா, ஆல் இண்டியா ரேடியோவிலே, அரைச்ச மாவையே திரும்ப திரும்ப அரைச்சுகிட்டு இருந்த காலம் 70-80கள்.

அதிக பட்சமா, நைட்டு 9மணிக்கு மேலே.. புது சினிமா ரிலீஸ் சம்பந்தமா.. “பா..ர..தி.. ராஜாவின்..சிகப்பு ரோஜாக்கள்”..ன்னு ஒரு சூப்பர் பெண் குரலும் “தாலாட்டு தே வானம்.. தள்ளாடு தே மேகம்” பாட்டோட ஆரம்பமும்.. “காலிக் ப்ரதர்ஸ் வழங்கும்.. கடல்மீன்கள்” திரைப்பட தொகுப்பு நிகழ்ச்சி. அதுலேயும் நடுவிலே.. நீங்கள் கேட்டு கொண்டிருப்பது.. எல்.ஆர்.ஸ்வாமி நேரம்-னு வழவழா கொழகொழா வந்துடும். நாங்க ஏழுமணிக்கே சாப்புட்டு, பத்து மணிக்குள்ளே குறட்டை விட்டு தூங்கிடுவோம், இதுக்கு பயந்தே!

அதே கால கட்டத்துலே, நமக்கு பத்து வருஷம் முன்னாடி இருந்தாங்க, நம்ம சிலோன் ரேடியோகாரங்க! என்ன கற்பனை வளம், என்ன தொழில்நுட்பம், ஜன ரஞ்சகம்...!!!

வீட்டுக்கு வீடு வானொலிப்பெட்டிக்கருகே ஆவலுடன் காத்திருக்கும், ரசிகப்பெருமக்களுக்கு.. என் அன்பு கலந்த வணக்கம்-என்று தேனாக குழைவார் இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தின் கே.எஸ்.ராஜா; அவர் சொன்னது அந்த காலகட்டத்தில், மிகையே இல்லாத உண்மை,சத்தியம்!

“ந என்ற எழுத்தில் மணி ஒலித்தது; நீங்கள் பாடவேண்டிய சொல் ந-குறில் அல்ல, நா-நெடில் என்று பாட்டுக்கு பாட்டோடு தமிழையும் கலந்து தருவார்.. பீ.ஹெச்.அப்துல் ஹமீத். (உதயா ஜிவெல்லர்ஸ் உபயம் என்று நினைவு)

ஆம், இல்லை, சொல்லக்கூடாது; எந்த சொல்லையும் மூன்று முறைக்கு மேல் சொல்லகூடாது என்று கலகலப்பான போட்டிகள்.. “கள்ளுகடை பக்கம் போகாதே.. காலைபிடிச்சு கெஞ்சுகிறேன்..” “ச்சின்ன மாமியே உன் ச்சின்ன மகளெங்கே” என்று தமிழ் பப்பிசையும் (பாப்!).. உண்டு!

அத்தானே அத்தானே எந்தனாசை அத்தானே.. என்ற சில்லைய்யூர் செல்வராசனின் .. மக்கள் வங்கி விளம்பர பாடல்.. (பெண் குரலில் கேள்வியொன்று கேட்கலாமா உனைத்தானே என்றதும், ஆண்குரலே கேள்வியை தானே கேட்டு பதிலையும் சொல்லிவிடும்).. ஆகா.. அன்றைய காலகட்டத்தின் பூலோக சொர்க்கம் அது! அப்படிப்பட்ட இலங்கையும் வானொலியும் இன்று, மொகஞ்சாதாரோ ஹரப்பா போல ஆகிவிடும் என்று யாரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்கவே மாட்டார்கள்... ஹூம்.. :(((((

அப்பா,அம்மா,நான் அதிகம் சண்டை போட்டதில்லை; அபூர்வமாக ரேடியோ ப்ரோக்ராம் கேட்பதில் அது வருவதுண்டு. நானும் அம்மாவும் பொழுது போக்கு கட்சி. அப்பாவுக்கு நியூஸ் ரொம்ப முக்கியம். அந்த வயதில் எனக்கு அவரது நியூஸ் ஆர்வம் ஆச்சரியமாக இருந்தது. நாம் விவசாயி இல்லை, வெயில் மழை பற்றி அறிய; வியாபாரியும் இல்லை லாப நஷ்டம் பார்க்க. எல்.ஐ.சி ஆபிஸில் ஒண்ணாம் தேதி டாண் என்று சம்பளம் வந்துடும்.. பின்னே எதுக்கு நியூஸ் கேட்கணும்.. சொல்லுங்க?

ரசனைகளில் இரு துருவங்களாக இருந்த அப்பாவும், நான் ப்ளஸ் அம்மா கூட்டணியும் சந்திக்கும் நேர் கோடும் இருந்தது! அது தான் கிரிக்கெட் நேர்முக வர்ணனை!

“பந்தை அனாவசியமாக அடித்தார்’ “பகூத் அச்சி கேந்த்/ஆப் ஸ்டம்ப் கி காஃபி பஹார்/சுந்தர் ஷாட்-சார் ரன்” “பாரத மத்து நியூஸிலேண்ட் சண்டகள நடுவே மும்பையிலெ.. மூருனே மத்து கொனை டெஸ்ட் வீக்ஷித் வருணனெ..” என்று கதம்பமாக இந்தியாவின் சகல பாஷையும் பேசும் ரேடியோ அப்போது!

கபில் தேவ் வந்த புதிதிலே, நாங்கள் குடும்பத்தோடு தஞ்சை சிவகங்கா பார்க்குலே சென்னை டெஸ்டு கமெண்டரி கேட்டு மகிழ்ந்தோம்; பேட்டிங்கும், பவுலிங்கும் பின்னிட்டார். 1978 இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மாட்ச்ன்னு நினைக்கிறேன். (பதிவர்கள்லே கிரிக்கெட் புள்ளி விவர புலிகள், பாஞ்சுடாதீங்க.. புள்ளி எதாவது கொஞ்சம் பிசகி முன்னே பின்னே இருந்தாக்க :)))

பார்க்குலே வர்ற்வங்க போறவங்களுக்கு சாக்லேட் கொடுத்து விழா எடுக்காத தோஷம்தான் போங்க! அப்போ எல்லாம், இந்தியா ஜெயிச்சா சிரிப்போம்/ தோத்தா அழுவோம், பைத்தியம் போல! அந்த வெறியிலே, கபில், கபில் என்றொருவர்.. கப்பென பிடிக்கும் பீல்டர் அவர்னு.. ரொம்ப பீல் பண்ணி கவி பாடிட்டேன். நண்பன் கலீல் கிட்டே காட்டினதும், அவன் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிகிட்டே, கவிதை:கலீல், உதவி:பாலு அப்படின்னு திருத்திட்டான்.. அந்த எமகாதகன்!

காலம் மாறிகிட்டே வந்தது; எங்களுக்கு வயசான மாதிரி ரேடியோவுக்கும் வயசாகிட்டு வந்தது; மக்கர் பண்ண ஆரம்பிச்சது. அப்போ அப்போ, ஒரு தட்டு தட்டினாத்தான் பாடும். பேட்டரி உருகி உள்ளே ஊத்தி ஒட்டிக்கும். ரிப்பேர் ஆகி செலவும் வைக்கும், அடிக்கடி. பள்ளி நாட்களிலே உற்ற தோழனா இருந்த ரேடியோவையும், அப்பா அம்மாவையும் விட்டு பிரிஞ்சு காலேஜுக்கு வெளியூர் போனதை இன்னோரு தொடரிலே எழுதாமலா போயிடுவேன்? நீங்களும் படிக்காமலா போயிட போறீங்க.. நண்பர்களே? :)))

இன்னைக்கு.. 2008லே ரேடியோ ஒரு புராதன சின்னம். டீவியும், கம்ப்யூட்டரும்,எம்பி3யும், ஐபாடும் அதோட இடத்தை அடிச்சு பிடுங்கி, குத்தி கொதறி பங்கு போட்டிடுச்சுங்க.. ஆனா மனுசங்க மட்டும் மாறலே..

டாட்டா ஸ்கையிலே டீவிலே எந்த சேனல் பாக்குறதுன்னு இப்போ எங்க வீட்டுலே அடிதடி நடக்குது. எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாமே, இந்திய அரசியல் மாதிரி.. பையனுக்கு ஈஸ்பியென் ஸ்போர்ட்ஸ் சேனல், பொண்ணுக்கு போகோ சேனல், பொண்டாட்டிக்கு.. தங்கமான புருஷன், கோகுலத்தில் சீதை தொடர்கள்.. ஒரு சமயத்துலே எதைதான் பார்க்கிறது? டீவி ரிமோட்டே கன்ப்யூஸ் ஆகிடும்!

எல்லாருக்கும் எது பிடிக்கும்னு தெரிஞ்சுகிட்டீங்க இல்லே? இப்போ எனக்கு எது பிடிக்குதுன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? திரும்ப திரும்ப நாள் பூரா ஒரே நியூஸ் ஒப்பிக்கிற ஸன் நியூஸ், ஜெயா செய்திகள், பிபிசி,சிஎனென், என்.டி.டீவி.. இப்படி நியூஸ் மட்டுமே பாக்க பிடிக்குது எனக்கு இப்போ எல்லாம், எங்க அப்பா மாதிரி.. வயசாகுது இல்லையா? :)))

அமெரிக்காவின் சப் ப்ரெய்ம் பிரச்சினை, உளுந்தூர் பேட்டை அருகே சாலை விபத்து, பங்கு சந்தை பாதாளத்தை அடைந்தது, விலைவாசி உயர்வுன்னு எல்லா நியூஸும் பேட் நியூஸாவே இருந்தாலும், உலகத்துலே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டா நல்லதுதான் இல்லையா?

சரி, இப்போ நாம் இந்த ரேடியோ பற்றிய என் பழம் கணக்கு பதிவுடைய முடிவுரைக்கு வந்துட்டோம். ஹிஸ்டரி ரீபீட்ஸ் அப்படின்னு டைட்ஸ் போய் பெல்ஸ் வந்து திரும்ப டைட்ஸ் வந்தது மாதிரி, ரேடியோவும் இப்போ பழைய படி பேமஸ் ஆகிட்டு இருக்கு. விடாத விளம்பர வெயிலுக்கு நடுவே தூறல் போல பாடல்கள், காதலிக்கு டெ(க)டிகேட் பண்ணும் அலம்பல்கள் நடுவே நல்ல நிகழ்ச்சிகளும் அவ்வப்போது வருது.

சூரியன் எப்.எம். யாழ் சுதாகரன் வந்துருக்காரு. “இரவின் மடியில்.. உலகம் மயங்கும்.. மயங்கும்’னு பாடிக்கிட்டே பி.பி.ஸ்ரீனிவாஸை போட்டுட்டாரு.. அதனாலே. இப்போதைக்கு உங்ககிட்டே இருந்து.. உத்தரவு வாங்கிக்கிறேன்.. நான்!

தஞ்சையிலிருந்து தமாம் தொடரும்..

6 comments:

cheena (சீனா) said...

அன்பின் பாலா

நல்லா கொசுவத்தி சுத்தறீங்க

நானும் தஞ்சை மேலவீதியிலே தான் இருந்தேன் - நீங்க சொல்ற ரேடியோ எல்லாம் நானும் அனுபவிச்சிருக்கேன்.

அப்படியே நினைச்சிப் பாத்தேன் - அரை மணி நேரம் - மகிழ்ச்சி

ராமலக்ஷ்மி said...

வழக்கம் போலவே மலரும் நினைவுகளை அருமையாகக் கொடுத்திருக்கிறீர்கள். உண்மைதான். அன்றைய ஒரே பொழுது போக்கு ரேடியோதான். அதுவும் இலங்கை வானொலிக்கு அடிமையாகதவரே இல்லையெனலாம்.

நம்ம ஊர் வானொலியில் ரேடியோ அண்ணா நிகழ்ச்சி கேட்டிருக்கிறீர்களா? சிறுவர்களுக்கான நிகழ்ச்சி. நான் ரேடியோ அக்காவாகி என் தம்பி, தங்கைகள் கஸின்ஸ் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு நிகழ்ச்சி நடத்துவேன்:))!

//இப்போ பழைய படி பேமஸ் ஆகிட்டு இருக்கு//

ஆறுதலான நல்ல விஷயம். பெங்களூரில் தமிழ் FM கேட்க முடியாது. World Space-ன் KL Radio சேனலில் 'இரவின் மடியில்' கேட்கத் தவறுவதில்லை. இனிய பழைய பாடல்கள் அப்படியே அந்த இலங்கை வானொலி காலத்துக்கே இட்டுச் செல்லும்.

Anonymous said...

கற்காலத்துக்கு சாரி முற்காலத்தக்கு அப்படியே எங்கள தூக்கிட்டு போயிட்டீங்க பாலா, நம்ம தஞ்சாவூரா நீங்க? அது சரி ராத்திரி நேரத்துல லைசன்ஸ் வாங்க எங்க போனீங்க?

Dammam Bala (தமாம் பாலா) said...

cheena (சீனா) said...
//அப்படியே நினைச்சிப் பாத்தேன் - அரை மணி நேரம் - மகிழ்ச்சி//

வாங்க, சீனா சார்.. தங்கள் மகிழ்ச்சி எங்கள் பாக்கியம்.

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க ராமலஷ்மி.

ரேடியோ அண்ணா நிகழ்ச்சிகளை நானும் கேட்டு ரசித்திருக்கிறேன். அதை நினைவூட்டியதற்கு நன்றி.

நமது சமகாலத்து நண்பர்களில், தஞ்சை மற்றும் தென் தமிழகத்தில் வசித்தவர்கள் பெரும்பாலும் இலங்கை வானொலியின் நேயர்கள்.

அதே சமயம் சென்னை மற்றும் வடதமிழ் நாட்டு நண்பர்களுக்கு இலங்கை வானொலியின் ஒலிபரப்பு சரிவர கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது.

சூரியன் எப்.எம், முன்பு இணையத்தில் வந்து கொண்டிருந்தது. அதை மீண்டும் சரிபார்த்துவிட்டு உங்களுக்கு சொல்கிறேன்.

உங்களது வாசிப்பும், ஊக்கமும் எனது எழுத்துக்கு ஒரு டானிக்! நன்றி.

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க தஞ்சாவூரான். எனது பதிவுக்குள் உங்களை வரவேற்று கொள்கிறேன்.

ஏற்கனவே, தஞ்சாவூர்காரன் என்று ஒருவர் பின்னூட்டம் போட்டிருந்தார். அவர்தானோ நீங்கள் என்று முதலில் நினைத்தேன்.

எங்கள் வீட்டுக்கு முதல் ரேடியோ வந்த போது எனக்கு 5 வயது. எனவே சம்பவத்தை நினைவு கூர்ந்து எழுதியதில் சில குளறுபடி வந்திருக்கலாம். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

நீங்கள் இன்னும் தஞ்சையிலே வசிக்கிறீர்களா? தஞ்சை என்னை துரத்தி விட்டு 25 ஆண்டுகள் ஓடிவிட்டன :-((