June 17, 2009

பய(ண)ம்

பய(ண)ம்
தமாம் பாலா


தோளிலே ஒரு பை, கையிலே ஒரு சூட்கேஸ் ; ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்ஃபாரம்!

ஸ்டேஷனுக்கு ரயில் வர்றத்துக்கு 1 மணி நேரத்துக்கு முன்னாலேயே வந்துட்டு, தண்டவாளத்து கற்பனை கூட்டு புள்ளியிலே ரயில தேடுற ஜாதி நாம.. அப்பா ட்ரெய்னிங் அப்படி; இன்னைக்கு என்னடான்னா.. ஓட்டமும் நடையுமா உள்ளே நுழையும் போதே, ப்ளாட்ஃபார்மிலே ரயில் தென்படுது!

இன்னும் ஒரு படிக்கட்டுதான்; தம் கட்டி ஓடி பிடிச்சிடலாமுன்னு மூட்டை முடிச்சோடு ஓடறேன்; மூச்சு இறைக்குது.. இருதயம் துள்ளி வாய் வழியா வந்திடும் போல.. இன்னும் ரெண்டே படி தான்.. “கூ..” ட்ரெயின் கிளம்பியே விட்டது..

ப்ளாட்ஃபாரத்துலே கை பையும், சூட்கேஸும் கிடக்க.. அநாதையா நிக்குறேன்.. ட்ரெயினோட கார்டு வேன்.. தூரத்துலே.. புள்ளியா மறையுது.. அப்போதான்.. டக்குன்னு முழிப்பு வந்தது; ஒரே குழப்பமா.. வேர்த்து கொட்டி.. அட.. எல்லாமே கனவுதாங்க!
நம்ப பிஸ்ஜி காலேஜுலே படிக்கிற காலத்துலேர்ந்தே நிறைய தடவை இந்த கனவு வரும், எனக்கு.

நிறைவேறாத ஆசைகள் மட்டுமில்ல, நிறைவேறாத பயங்கள் கூட கனவுகளா வரும்னு கேள்விப்பட்டிருக்கோம் இல்லையா? நாம வேற ஏற்கனவே தொடைநடுங்கி.. இருட்டை பார்த்து பயப்படுவோம்; இருக்கிறது இல்லாதது எல்லாத்துக்குமே கவலைப்படுவோம்.

காலேஜு முடிச்சு வேலை, தொழில், கல்யாணம்னு கொஞ்ச நாளுக்கு ரொம்ப பிஸியா இருந்ததாலேயோ என்னமோ, இந்த கனவு வர்ற்து நின்னு போயிடுச்சு.

1993லே கல்யாணம் ஆச்சு, 1994லே ஆகாஷ் பொறந்தான் எனக்கு (எனக்குன்னா, என் பொண்டாட்டி ராதிகாவுக்கு :)) அவன் பொறந்து ஒரு வாரம் தான் இருக்கும்; ஆபீஸ்லே பாஸ் ஒரு குண்டை தூக்கி போட்டார்.. “பாலா, நாளைக்கே நீ நேபாள் போறே.. போயி.. திரிசூலி தேவிகாட் அக்விடக்ட் அப்ரூவலோட வர்ற..”

எப்படி நானு குடும்பத்தை விட்டுட்டு போறது? தெனம் லேட்டா போனலும் 9 மணிக்கு வீட்டுக்கு போயிடறோம்; ராதிகாவும், மாமாவும் சொல்றாங்க, எல்லாம் நாங்க பாத்துக்கறோம், நீங்க போயிட்டு வாங்கன்னு. (பின்னாலே சவுதி போகவும் இதுதான் அச்சாரம்!)

சென்னைலேர்ந்து டெல்லிக்கு ரயில் பயணம்; டெல்லி-காட்மாண்டு விமானத்துலே, வாழ்க்கையிலே முதல் ஆகாய வழி பயணம், இமயமலை பனி சிகரம் சூரிய ஒளியிலே சும்மா மின்னுது. நேபாளத்துலே பத்து நாள் இருந்தேன்; ஆபீஸ் வேலையெல்லாம் நல்ல முடிஞ்சது; கம்பெனியிலே வேலை செய்ற தமிழ் நண்பர்கள் குடும்பத்து புண்ணியத்துலே சாப்பாடு பிரச்சனை எதுவும் இல்லை!
வேலை முடிஞ்சு டெல்லி வந்துட்டேன்; சென்னை ரயில் ராத்திரி தான். அதுவரைக்கும் கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்லே தங்கலாம்னு போனேன். எல்லாம் சௌகரியமாத்தான் இருந்தது; சாயந்தரம் வரைக்கும்.

ஒரு நாளைக்கு, முழுசா மூணு வேளை சாப்புடுற பாரம்பரியம் நம்பளது; சின்ன வயசுலே அம்மா, இட்லி/தோசை/ஆப்பம்-தேங்காபால் வச்சா கணக்கு பாக்காம சாப்பிட்றது வழக்கம். ட்ரெயினுக்கு இன்னும் 2 மணி நேரம் இருக்கு; கெஸ்ட் ஹவுஸிலே உபசாரம் பிரமாதம்; சூடா சப்பாத்தி குருமா சாப்பிட்டுட்டு போகலாம்னு கெஞ்சுறான். சரி எதுக்கு குறை வைப்பானேன்னு, தட்டோட டைனிங் டேபிள்லே ஒட்கார்ந்து ஒரு கட்டு கட்டிட்டேன் :)


ஒரு வழியா கிளம்பியாச்சு; ரயில்வே ஸ்டேஷன் போறத்துக்கு ஒரு ஆட்டோ கூட்டி வந்துட்டாங்க; பெட்டி படுக்கையோட ஆட்டோவிலே ஏறிட்டேன், ஆட்டோ போகுது.. போகுது.. போய்கிட்டே இருக்குது.. ஸ்டேஷன் வந்த பாடு இல்லே.. நானும் எனக்கு தெரிஞ்ச பட்லர்(?) இந்தியிலே ஆட்டோ ட்ரைவர் கிட்டே என்ன என்னமோ கேக்குறேன்; அரைகுறையா புரிஞ்ச வகையிலே, அவன் புதுசா கிராமத்துலேர்ந்து, டெல்லிக்கு வந்துருக்கான், அவனுக்கு.. டெல்லியிலே ஒரு ரூட்டும் தெரியாதுன்னு.. மெல்ல விளங்குது! (ஆகா.. எல்லாரும் எப்படிடா க்ரெக்டா.. என்னையே குறிவெச்சு வர்றீங்க?!?)

சுத்து சுத்துன்னு சுத்தி.. தெருவுக்கு தெரு ஆட்டோவை நிறுத்தி.. டெல்லி ரெயில்வே ஸ்டேஷன் பாத்தீங்களா.. பாத்தீங்களான்னு.. மோதிரத்தையோ சாவியையோ தொலைச்சவன் மாதிரி துழாவி.. ஒரு வழியா ஒரு சந்துக்குள்ளே புகுந்து டெல்லி ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்துட்டான்; அந்த படுபாவி!

பணத்தை குடுத்துட்டு, லக்கேஜோட.. ப்ளாட்ஃபாரத்துலே ஓடுறேன்.. கண்ணு எதிரே.. தமிழ் நாடு எக்ஸ்பிரஸ்.. கூ..கூ.. போயே.. போச்சு.. போயிந்தி.. சல்கயாச்சே.. இட்ஸ் கான்!

ஒரு வழியா, என் நீண்ட நாள் கனவு நிறைவேறிடுச்சு! சோர்ந்து போய் ப்ளாட்ஃபாரத்துலேயே உட்கார்ந்துட்டேன்; கொஞ்ச நேரத்துக்கு உலகமே முடிஞ்சிட்டமாதிரி, எல்லாத்தையும் தொலைச்சிட்ட மாதிரி இருந்தது ; சுதாரிச்சுக்கிட்டேன்.. முதல் வேலையா, ஃபர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட்டை ரிட்டன் கொடுத்து அடுத்த நாளுக்கு செக்கண்ட் க்ளாஸ் டிக்கெட் வாங்கினேன்; ஆபிசுக்கு அர்ஜெண்ட் பேப்பரை ஃபேக்ஸ் பண்ணிட்டு, வீட்டுக்கும் ஒரு ஃபோன் போட்டேன்; ஒரு வழியா நேபாளத்து பயணம், பல நாள் கனவு நிறைவேற்றத்தோடே இனிதே(!) நிறைவேறிச்சு!

இன்னிக்கு நினைச்சுப் பார்த்து அசை போடும் போது 15 வருஷம் ஓடியே போச்சு.. இப்பொ எல்லாம் ‘ரயில் மிஸ் பண்ணுற கனவு வர்றதே இல்லே” ; நம்பளும் ட்ரெயினுக்கு போறத்துக்கு முன்னாடி தட்டு வெச்சுகிட்டு உட்கார்றதே இல்ல. முதல்ல ட்ரெயின பிடிப்போம், இருக்கவே இருக்கு ‘பொங்கல்/இட்லி/வடை/ போண்டா.. இல்லைன்னா பச்சை வாழை பழம் அல்லது பிஸ்கட் (பக்கத்து சீட்காரன் கொடுத்தாதான் டேஞ்சர்!)

உண்மையிலே நல்லது கெட்டது நடக்குறதை விட அப்படி ஆயிடுமோ, இப்படி நடந்துடுமோங்கற பயம் தாங்க நம்மை பிடிச்சு ஆட்டுது; உண்மையிலேயே அது நடந்துட்டாலும், எப்படியாவது தட்டுதடுமாறி எழுந்து வந்திடுவோம், இல்லையா?

என்னுடைய காலப்பய(ண)த்துலே கலந்துகிட்டதுக்கு நன்றி! :))

2 comments:

Subbiah Veerappan said...

சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள் பாலா!
பாராட்டுக்கள். நன்றி!

Dammam Bala (தமாம் பாலா) said...

///
SP.VR. SUBBIAH said...
சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள் பாலா!
பாராட்டுக்கள். நன்றி! ///

மிக்க நன்றி அய்யா, தங்களது வருகைக்கும், ஊக்கம் தரும் அன்புக்கும்..