தமாம் பாலா
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே. இது காசி 2001 ல் வந்த தமிழ்த் திரைப்படம். கலாபவன் மணி மலையாளத்தில் நடித்த படத்தைத் தழுவி தமிழில் விக்ரம் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம். இந்தப் பதிவு அந்தக் காசி பற்றியது அல்ல.
சமீபத்தில் நான் சென்று வந்த உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு பற்றியது அது. சைகான் நகரில் இருந்து இந்தோனேசியா செல்ல மலேசிய கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஒரு இடை நிறுத்தம். கே.எல்.ஐ.ஏ 2 விமான நிலையம்.
காலை 9.30 மணிக்கு ஹோசிமின் நகர் விமான நிலையம், ஏர் ஏசியா விமானம். மதிய உணவு நேரத்துக்கு கே.எல் சேர்ந்தோம். எங்கு பார்த்தாலும் தமிழர் நடமாட்டம். பொட்டு வைத்து பூமுடித்து வட்ட நிலவாய் பணி புரியும் பெண்கள், மண்ணின் மைந்தராய் ஆண்கள். அடுத்த விமானம் இரவு பத்து மணிக்கு.
முன் கூட்டியே செல்ல வேறு விமானம் கிடைக்குமா என்று பார்க்க கிட்டத்தட்ட ஏர் ஏசியா அலுவலகத்துக்கு விமான நிலையத்தின் வெளிவாயில் வரை நகரும் படிகளில் நடை பயின்றேன். அழகுத் தமிழில் ஆகாது விமானம் மாற என்ற செய்தி ஆறுதலாய் அதிசயமாய் அலுவலர் இன்முகத்தால் ஆனது.
டேஸ்ட் ஆப் இந்தியா என்ற பெயரில் அச்சடித்த டபரா சோறும் அளவு சாப்பாடாய் காய்கறிகள். அது போதாதென பருப்பு வடையும் ப்ரூ காப்பியும். மலேசிய வெள்ளி கையில் இல்லை. அமெரிக்க டாலருக்கும் தடா. விசா அட்டை கை கொடுத்ததால் தப்பித்தேன், மணி எக்ஸ்சேஞ்ச் போகாமலேயே. இரவு வரை இன்னும் காப்பி, பிட்ஸா பனானா கேக் என்று நொறுக்குத் தீனி.
ஒரு வழியாய் இரவு விமானம் பிடித்து இந்தோனேசியா வந்து சேர்ந்தோம். பத்து மணிக்கு மலேசியாவில் புறப்பட்டு பத்து மணிக்கு இந்தோனேசியா சேர்ந்தது கிட்டத்தட்ட ஒரு டைம் ட்ராவல் அதிசயம். தமிழில் சொன்னால் அது காலப் பயணம்.
வந்த இடம் புதியது, இந்தோனேசியா பணம் மாற்றலாம் என்றால் மணி எக்ஸ்சேஞ்ச் பூட்டி விமான நிலையம் இரவுத் தூக்கத்துக்கு படுக்கை தட்டிப் போட்டு தயார் ஆகி விட்டது. ஒரு வழியாய், விசா ஆன் அரைவலில் கொடுத்த டாலருக்கு, சில்லரையாய் கிடைத்த ருபையாக்கள் ஒரு அதிர்ஷ்டப் பரிசாய் அமைந்தது.
விமான நிலையம் வெளியே, இறைவன் அனுப்பிய தேவ தூதனாய் வந்தார் உள்ளூர் ஆதி. கிராப் கார் ஓட்டுனராம், அவரே முன்னெடுப்பாய் எங்களை வண்டியில் ஏற்றி விடுதியில் சேர்த்து விடைபெற்றார். அவர் பேசிய ஆங்கிலம் அதிசயம் ஆனால் உண்மை.
புதிய ஊர் புதிய மனிதர் பகாஸா பேசும் ஊரில் மூன்று மாரியம்மன் கோயில்கள். இருநூறு ஆண்டுக்கும் முன் இங்கு வந்த தமிழர் கட்டியதாம். அதில் ஒரு கோயிலில் இரவு பூஜை தீபாராதனை பார்த்து, மசால் தோசை பூரி சாப்பிட்டு இனிதாய் ஒரு நாள் முடிந்தது.
சரி இப்போது இந்தப் பதிவின் தலைப்புக்கு வருவோம். புதிய நாட்டின் விருந்தோம்பல் வழக்கமாய், முகமன் கூற வணக்கம், நன்றி மற்றும் சைவ மரக்கறி உணவுக்கான உள்ளூர் சொற்களை கைவசப்படுத்துவது என் வழக்கம். நன்றி சொல்ல உள்ளூர் மொழியில், Terima Kasih என்றார். அது எனக்கு, தெரி(யு)மா காசி(ஹ்) என்று தேனாய் காதில் பாய்ந்தது!
இன்னும் இந்தியாவில் வாரணாசி என்ற பாரதி கண்ட காசியை பாலா கண்டதில்லை என்றாலும், குறைந்த பட்சம் ராமேஸ்வரம் தெரியும். கண் தெரியாத காசி போல, மொழி பாஷை தெரியாத ஊரில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல திரிந்த பின்னர், திரும்ப வந்தோம் மலேசியா விமான நிலையத்தில் தமிழ் பேசி சைகையால் பேசும் சைகானில் மறு வருகை!