December 19, 2015

டெட் டாவோ குவன், Tet Tao Quan

Kitchen God Day - Tet Tao Quan

அடுப்படி கடவுள் தினம்- டெட் டாவோ குவன்

(தமாம் பாலா)


வியட்நாமிய நாடு, நீண்ட வரலாற்றுச் சிறப்பையும்,பண்பாட்டுப் பின்னணியும் உடையது. பண்டிகைகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் குறைவே இல்லாத நாடு அது.

வியட்நாமிய வருடம், சந்திரனை அடிப்படையாக கொண்டது, அவர்களது புது வருடம் ஆங்கில வருடத்தின் ஜனவரி இறுதியில் தொடங்கும், சீன புது வருடத்தோடு இணைந்தே வரும் அதனை (TET)டெட் என அழைப்பர். டெட்டுக்கு ஒரு வாரம் முன்பு வரும் ‘டெட் டாவோ குவன்’ என்னும் ‘அடுப்படி கடவுள் தினம்’ வியட்நாமியரின் முக்கியமான பண்டிகை ஆகும்

அடுப்படி கடவுள் தினம் – பாரம்பரியக் கதை






















இந்தியா போல வியட்நாமிலும் பண்டிகைகளுக்குப் பின்னால் நாட்டுப்புறக் கதைகள் இருக்கின்றன. இந்த பண்டிகை கொண்டாட காரணமான கதையை இங்கே காண்போமா?

‘இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும்’ என்ற முக்கோண காதல் கதை தான் அது. பின்னாளில் அவர்களே அடுப்படி கடவுள்களாகவும் மாறுகின்றார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

‘சாங் காவோ’வும், ‘தி நி’ யும் கணவன் மனைவி என்று கதை தொடங்குகிறது. அவர்களுக்கு கலியாணம் நடந்து வெகு நாட்கள் ஆகியும் குழந்தைப்பேறு இல்லாததால், வீட்டிலே தினமும் சண்டை, சச்சரவு தான். ஒரு நாள் சாங் காவோ கோபத்தின் உச்சிக்குப்போய் தி நியை வீட்டை விட்டு தள்ளி வைத்து, துரத்தி விடுகிறான். அவளும் வீட்டை விட்டு வெளியேறிய பின் ஃபாம் லாங் என்பவனை மறுமணம் செய்து கொள்கிறாள்.

கொஞ்ச நாட்களுக்குப் பின், தன் தவறை உணர்ந்த சாங் காவோ தி நியைத் தேடிப்போகிறான். போகும் வழியில். தன் கையில் உள்ள பணத்தையெல்லாம் செலவழித்து கிட்டத்தட்ட ஒரு பிச்சைக்காரன் ஆகவே ஆகிவிடுகிறான் அவன். எதேச்சையாக தி நியின் புது விலாசத்தை அடைந்து, அவளிடம் மன்னிப்பு கேட்க, பிரிந்த ஜோடி பழைய நாட்களையும், புதிய வாழ்க்கையையும் பேசிப்பேசி அசை போடுகிறது. 

இதற்குள்ளாக, வெளியே சென்ற இரண்டாவது கணவன் ஃபாம் லாங் வீடு திரும்புகிறான். அவசரத்துக்கு தி நி, சாங் காவோவை வீட்டின் பின்புறத்து வைக்கோல் போரில் ஒளிந்து கொள்ளச் சொல்கிறாள். இது தெரியாத ஃபாம் லாங் உரத்துக்காக வைக்கோல் போரை கொளுத்தி விட, சாங் காவோவும் அதனுடன் எரிந்து சாகிறான். இதைப் பார்த்து மனம் உடைந்த தி நி தானும் அந்த நெருப்பிலேயே குதித்து உயிரை விட, ஃபாம் லாங் தானும் தன் உயிரை மாய்த்துக் கொள்வதாய் கதை சோகத்தில் முடிகிறது.

மாண்ட மூவரது ஆவியும் சொர்க்கத்தை சென்றடைய, அங்கு நாக் ஹோ அங் என்கின்ற மாணிக்க சக்கரவர்த்தி (the Jade Emperor) அவர்களுக்கு ‘டாவோ குவன்’ என்ற தெய்வ பதவியை வழங்குகிறார். அன்று முதல் கொண்டு, ஃபாம் லாங் – சமையல் கட்டின் மூர்த்தியாகவும், சாங் காவோ – நிலத்தின்/ வீட்டின் மூர்த்தியாகவும், தி நி – சந்தையின் காவல் தெய்வமும் ஆக விளங்குவதாக வியட்நாமிய புராணக்கதை சொல்கிறது.

இவ்வாறாக வீட்டையும், சொத்தையும் ஒன்று சேர்ந்து பாதுகாக்கும் இந்த அடுப்படி தெய்வங்கள், சந்திர வருடத்தின் கடைசி மாதத்தின் 23ம் நாளில், சொர்க்கத்துக்கு சென்று கணக்குகளை ஒப்படைத்து, புது வருடத்துக்கு நல்லாசிகளை பெற்று வருவதாக ஐதீகம்; அவர்கள் புது வருடத்தின் தொடக்கத்தில் பூமிக்குத் திரும்பி, வருடம் முழுவதும் தன் கடமையைத் தொடர்கின்றனர் என்பது அவர்களது நம்பிக்கை!

No comments: