ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 3.
தமாம் பாலா For Audio Please Click Here
சமவெளிகளும், மலைப்பிரதேசங்களும், வெவ்வேறு உலகங்கள்; இந்த உலகங்களை இணைக்கும் மலைப்பாதைகள் எந்த நாட்டில் இருந்தாலும் அவற்றின் இலக்கணங்களும் அமைப்பும் பொதுவானவை. ஸா பா செல்லும் பாதையும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. வளைந்து, உயர்ந்து, சுற்றி முனை தாண்டி என்ன இருக்கிறது எந்த வண்டி வருகிறது என்பதே தெரியாத உத்தேசமான ஒரு பயணம்; சற்றே அகன்ற, ஓரளவு சௌகரியமான கொண்டை ஊசி வளைவுகள்!
மேலே போக போக, வெயில் தெரியாமல், லேசாக சிலுசிலுவென்ற காற்றோடு மழைத்தூரலுடன் சூழ்நிலை ரம்மியமாக இருந்தது. இதற்கு அழகு சேர்ப்பது போல, கைபேசியில், எஸ்.பி.பாலுவின் இழைக்கும் குரலில், ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளியை’ (ரோசாப்பூ ரவிக்கைகாரி) தட்டி விட்டேன். தமிழ் நண்பர்களுடன், வேன் ஓட்டுனர், மற்றும் உடன் அமர்ந்திருந்த இன்னொரு வியட்னாமியும் தமிழ் இன்னிசை கேட்டு மகிழும் பேறு பெற்று, ஜென்ம சாபல்யம் அடைந்தனர் என்றே சொல்ல வேண்டும்.
மலையின் ஒவ்வொரு அங்குலமும் குளிருக்கு அடக்கமாக, கனமான பச்சை கம்பளி போர்த்தியிருக்க, பசுமைப் படிக்கட்டுகளில் விவசாயம் நடப்பதும், திரை போட்டு மூடித்திறக்கும் கண்ணாமூச்சி விளையாட்டில் மேகங்களும், அருவிகளும் மும்மரமாக ஈடுபட்டிருப்பதும் அங்கங்கே தெரிந்தது.
நடுவில் ஒரு இடத்தில் சாலைப்பணி நடைபெறுவதால், தாற்காலிகமான சேறும் சகதியுமான மண்பாதையிலும் கொஞ்ச நேரம் பயணித்தோம். மலைப்பாதையின் இறுதியில் ஊருக்குள் நுழைந்த போது, ஒரு அழகான ஏரியும், அன்ன படகுகளும் அதன் கரையில் அழகிய கட்டிடங்களும் தென்பட்ட போது, ஸா பாவில் நுழைந்து விட்டோம் என்று தெரிந்தது. அதன் பின் சற்றே சரிவான கடைத்தெருவைத் தாண்டி, அடுத்த அடுக்கில் உள்ள ஸா பா ஸம்மிட் விடுதியை அடைந்தோம்.
அந்த கட்டிடத்தைப் பார்த்தவுடன் எனக்கு தெருவின் ஒரு பக்கத்தில் தரைத் தளமாகவும், கட்டிடத்தின் பின்புறத்து தெருவில் முதல் மாடியாகவும் இருக்கும் பெங்களூரு வீடுகள் நினைவுக்கு வந்தன. ஆம்; ஸம்மிட் நுழைவாயில் இருந்தது, மூன்றாம் மாடியில். அதற்கு மேலே 3 மாடிகளும், கீழே 3 மாடிகளும் இருந்தன. மலைச்சரிவை சரியாக பயன்படுத்தி அங்கே உள்ள அனைத்து கட்டிடங்களும் கட்டபட்டிருப்பது தெரிந்தது.
உள்ளே போன போது, வரவேற்பறையில், வெளிநாட்டினர் முக்கியமாக ஐரோப்பியர்/அமெரிக்கர் போல பலர் கண்ணில் பட்டனர். பயணக்களைப்பில், எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் கொஞ்சம் இளைப்பாறி, குளித்து முடித்து ஒரு கோப்பை காபியையும் சுவைக்கலாம் என்று தானே நீங்களும் என்னைப் போலவே நினைப்பீர்கள்? நானும் அப்படித்தான் நினைத்தேன்; ஆனால் நடந்தது வேறு!
ஸா..பா.. தொடரும்
2 comments:
நாங்களும் தமிழ் பாட்டு கேட்டபடி பச்சைமலைப் பக்கம் பயணித்தது போல படங்களுடன் அழகான விவரிப்பு.
பெங்களூர் இப்போ மாறிவிட்டது. அப்பார்ட்மெண்டுகளைப் பார்த்து தனி வீடுகளெல்லாமும் ரெண்டுமூணு மாடிகளாகி விட்டன, வாடகைக்கு விடலாமென:)!
நமஸ்காரா ராமலக்ஷ்மி அவரே :) ச்சென்னாகிதிரா?
கல்லூரி படிப்பு முடிந்த 90களின் தொடக்கத்தில் பெங்களூருவில் நான் வசித்த 3 வருடங்கள் மறக்க முடியாதது!
அங்கு சந்தித்த தமிழ்/கன்னட நண்பர்களைப் பற்றி தனியே ஒரு தொடரே எழுதி விடலாம்.
இப்போதும் என் உறவினர்கள் அங்கே இருக்கிறார்கள்; வருடாவருடம் நான் பெங்களூரு வருவதில்லை என்று அன்பாய் குறைபட்டுக்கொண்டு!
சொந்த ஊருக்கே விருந்தாளியாக நம் பிழைப்பும் ஓடிக்கொண்டிருக்கிறது :(
Post a Comment