ராஜ பார்வை
தமாம் பாலா
வியட்நாமின் சந்திரப் புத்தாண்டு முடிந்தது 2025 பிப்ரவரி முதல் வாரத்தில். விடுமுறை முடித்து சென்னையில் இருந்து ஸ்கூட் விமானம் மூலம் சிங்கப்பூர் வந்தேன். உலகின் தலைசிறந்த சங்கி விமான நிலையம் முழுவதும் கம்பள விரிப்பு அழகு அருமை. நம் பெட்டியை இழுத்துச் செல்ல தள்ளு வண்டியே உகந்தது. ஆங்காங்கே நாற்காலிகள் நிரம்பி உலகம் சுற்றும் வாலிப வாலிபிகள் தரையில் அமர்ந்தும் படுத்தும் இருந்தது கண்கொள்ளா காட்சி.
காலை முதல் மாலை வரை வியட்நாம் சைகான் இணைப்பு விமானத்துக்கு காத்திருந்தேன். விமான நிலைய இணையம் பலமாய் இருந்ததால் வியட்நாம் அலுவலகத்துடன் குட்டி இணைய சந்திப்பும் இனிதே நிறைவேறியது. அடுத்த விமானத்தில் ஏறும் கதவு 19க்கு போக சற்று மூச்சு வாங்கி விட்டது.
ஆசுவாசம் செய்ய ஒரு நாற்காலியைத் தேடி, அமர யத்தனித்தேன். எங்கிருந்தோ முளைத்த ஒரு சீனப் பெண்மணி, அய்யா இது என் இருக்கை என்றாள். கொஞ்சமாய் அதிர்ந்து நான் அவளுக்கு வழிவிட்டேன். அவளுக்கு பக்கத்து இருக்கை மேல் பயணப் பெட்டிகள், அடுத்த இருக்கையில் ஒரு முதியவர் (நானும் சின்னப் பையன் அல்ல கொஞ்சமாய் முதுமைக்குப் புதியவன்).
"இருக்கைகள் மனிதர் அமர, பெட்டி படுக்கை வைக்க அல்ல" என கொஞ்சமாய் என் வார்த்தைகள் வரம்பு மீறி விட்டன. "நீங்கள் கேட்டால் அதை காலி செய்கிறேன், கேலி வார்த்தை வேண்டாமே" என்றார் முதியவர். வழக்கம் போல ஒரு மன்னிப்பு கேட்டு நிலைமையை சரி செய்து, ஒரு வழியாக இட ஒதுக்கீடு கிடைத்தே விட்டது.
வியட்நாம் வந்து இரண்டு நாளில் தாய்லாந்து பயணம் தொழில்முறையில். மீண்டும் வியட்நாம் தினம் தினம் புது புது மனிதர்கள் அலுவலகம் வருவதும் பகலில் தொழிற்சாலை இரவில் உணவகம் என இன்னும் ஒரு வாரம் ஓடி விட்டது.
இதுவரை எழுதுவதற்கு என தூண்டிலோ தூண்டுகோலோ இல்லை, இன்று மதியம் அவளை நான் பார்க்கும் வரை. இன்று சனிக்கிழமை, அரைநாள் வேலை, வார இறுதி தொடக்கம். என் அலுவலகம் இருப்பது வியட்நாம் நகரம், தன் பூ மாவட்டம், லே துக் ஹோக் தெருவில். இருவழிப் பாதை நடுவில் கொஞ்சமாய் புல்வெளி.
அடுத்த தெருவில் ஒரு வியட்நாமிய சைவ உணவகம், நேற்று தான் மறு திறப்பு டெட் விடுமுறை முடிந்து. தெருவில் நான் பார்த்த பெண், அவள் கையில் பார்வையற்றவர் கைத்தடி, கண்கள் மூடியே இருந்தன, கறுப்புக் கண்ணாடி இல்லை, வயது 25-30 இருக்கலாம், தரையில் தட்டிய படியே பாதையை அளந்து சென்றாள். அவள் கையில் லாட்டரி சீட்டுகள்!
வியட்நாமில் முதியவர் பார்வையற்றவர் லாட்டரி சீட்டு விற்பது வழக்கம். ஒரு சீட்டு 10,000 டாங் ( ரூ 30 பக்கம்) அவளிடம் ஒரு சீட்டு வாங்கி அவள் கையில் ஒரு வியட்நாம் காகிதப் பணத்தைத் திணித்தேன். அவளை வழி நடத்தி, பாம் வன் சாவ் தெருவில் நடந்தோம். அது மோட்டர் பைக் கார் என பிசியான சின்ன தெரு. அடுத்த கொரிய உணவக காவலரிடம் அந்த பெண்ணை ஒப்படைத்தேன், அவர் எனக்கும் மூத்த வியட்நாமியர். அவரும் அவளிடம் ஒரு லாட்டரி சீட்டு வாங்கி விட்டார்.
நான் ஓட்டமும் நடையுமாய், உணவகம் வந்தேன். சட்டென்று ஒரு திட்ட மாறுதல், உட்கார்ந்து சாப்பிட வேண்டாம். இரண்டு சாப்பாடு பார்சல், எனக்கு ஒன்று அந்த ராஜ பார்வை பெண்ணுக்கு ஒன்று.
ஐந்து நிமிடத்தில் கையில் இரண்டு சாப்பாட்டுடன், வந்த வழியே திரும்பினால் எங்கும் அந்த(க)ப் பெண்ணின் சுவடே தென்படவில்லை. தெருமுக்கின் நான்கு மூலைகளையும் துழாவி மிஞ்சியது ஒரு சிறு ஏமாற்றம், ஒரு சாப்பாட்டை கொரிய உணவகக் காவலரிடம் கொடுத்து, புன்முறுவல் நன்றி வாங்கி வீடு திரும்பினேன்.
இப்படியாக இந்த நாள் இனிய நாள் இரவு இப்போது. யூடியூபில் தலை அஜித்தின் ஆரம்பம் பார்த்தபடி இந்த தமாம் பாலாவின் ராஜ பார்வையை நிறைவு செய்கிறேன், நன்றி வணக்கம் சகோஸ்!