February 22, 2025

ராஜ பார்வை

ராஜ பார்வை
தமாம் பாலா

வியட்நாமின் சந்திரப் புத்தாண்டு முடிந்தது 2025 பிப்ரவரி முதல் வாரத்தில். விடுமுறை முடித்து சென்னையில் இருந்து ஸ்கூட் விமானம் மூலம் சிங்கப்பூர் வந்தேன். உலகின் தலைசிறந்த சங்கி விமான நிலையம் முழுவதும் கம்பள விரிப்பு அழகு அருமை. நம் பெட்டியை இழுத்துச் செல்ல தள்ளு வண்டியே உகந்தது. ஆங்காங்கே நாற்காலிகள் நிரம்பி உலகம் சுற்றும் வாலிப வாலிபிகள் தரையில் அமர்ந்தும் படுத்தும் இருந்தது கண்கொள்ளா காட்சி.

காலை முதல் மாலை வரை வியட்நாம் சைகான் இணைப்பு விமானத்துக்கு காத்திருந்தேன். விமான நிலைய இணையம் பலமாய் இருந்ததால் வியட்நாம் அலுவலகத்துடன் குட்டி இணைய சந்திப்பும் இனிதே நிறைவேறியது. அடுத்த விமானத்தில் ஏறும் கதவு 19க்கு போக சற்று மூச்சு வாங்கி விட்டது.

ஆசுவாசம் செய்ய ஒரு நாற்காலியைத் தேடி, அமர யத்தனித்தேன். எங்கிருந்தோ முளைத்த ஒரு சீனப் பெண்மணி, அய்யா இது என் இருக்கை என்றாள். கொஞ்சமாய் அதிர்ந்து நான் அவளுக்கு வழிவிட்டேன். அவளுக்கு பக்கத்து இருக்கை மேல் பயணப் பெட்டிகள், அடுத்த இருக்கையில் ஒரு முதியவர் (நானும் சின்னப் பையன் அல்ல கொஞ்சமாய் முதுமைக்குப் புதியவன்). 

"இருக்கைகள் மனிதர் அமர, பெட்டி படுக்கை வைக்க அல்ல" என கொஞ்சமாய் என் வார்த்தைகள் வரம்பு மீறி விட்டன. "நீங்கள் கேட்டால் அதை காலி செய்கிறேன், கேலி வார்த்தை வேண்டாமே" என்றார் முதியவர். வழக்கம் போல ஒரு மன்னிப்பு கேட்டு நிலைமையை சரி செய்து, ஒரு வழியாக இட ஒதுக்கீடு கிடைத்தே விட்டது.

வியட்நாம் வந்து இரண்டு நாளில் தாய்லாந்து பயணம் தொழில்முறையில். மீண்டும் வியட்நாம் தினம் தினம் புது புது மனிதர்கள் அலுவலகம் வருவதும் பகலில் தொழிற்சாலை இரவில் உணவகம் என இன்னும் ஒரு வாரம் ஓடி விட்டது.

இதுவரை எழுதுவதற்கு என தூண்டிலோ தூண்டுகோலோ இல்லை, இன்று மதியம் அவளை நான் பார்க்கும் வரை. இன்று சனிக்கிழமை, அரைநாள் வேலை, வார இறுதி தொடக்கம். என் அலுவலகம் இருப்பது வியட்நாம் நகரம், தன் பூ மாவட்டம், லே துக் ஹோக் தெருவில். இருவழிப் பாதை நடுவில் கொஞ்சமாய் புல்வெளி.

அடுத்த தெருவில் ஒரு வியட்நாமிய சைவ உணவகம், நேற்று தான் மறு திறப்பு டெட் விடுமுறை முடிந்து. தெருவில் நான் பார்த்த பெண், அவள் கையில் பார்வையற்றவர் கைத்தடி, கண்கள் மூடியே இருந்தன, கறுப்புக் கண்ணாடி இல்லை, வயது 25-30 இருக்கலாம், தரையில் தட்டிய படியே பாதையை அளந்து சென்றாள். அவள் கையில் லாட்டரி சீட்டுகள்!

வியட்நாமில் முதியவர் பார்வையற்றவர் லாட்டரி சீட்டு விற்பது வழக்கம். ஒரு சீட்டு 10,000 டாங் ( ரூ 30 பக்கம்) அவளிடம் ஒரு சீட்டு வாங்கி அவள் கையில் ஒரு வியட்நாம் காகிதப் பணத்தைத் திணித்தேன். அவளை வழி நடத்தி, பாம் வன் சாவ் தெருவில் நடந்தோம். அது மோட்டர் பைக் கார் என பிசியான சின்ன தெரு. அடுத்த கொரிய உணவக காவலரிடம் அந்த பெண்ணை ஒப்படைத்தேன், அவர் எனக்கும் மூத்த வியட்நாமியர். அவரும் அவளிடம் ஒரு லாட்டரி சீட்டு வாங்கி விட்டார்.

நான் ஓட்டமும் நடையுமாய், உணவகம் வந்தேன். சட்டென்று ஒரு திட்ட மாறுதல், உட்கார்ந்து சாப்பிட வேண்டாம். இரண்டு சாப்பாடு பார்சல், எனக்கு ஒன்று அந்த ராஜ பார்வை பெண்ணுக்கு ஒன்று.

ஐந்து நிமிடத்தில் கையில் இரண்டு சாப்பாட்டுடன், வந்த வழியே திரும்பினால் எங்கும் அந்த(க)ப் பெண்ணின் சுவடே தென்படவில்லை. தெருமுக்கின் நான்கு மூலைகளையும் துழாவி மிஞ்சியது ஒரு சிறு ஏமாற்றம், ஒரு சாப்பாட்டை கொரிய உணவகக் காவலரிடம் கொடுத்து, புன்முறுவல் நன்றி வாங்கி வீடு திரும்பினேன். 

இப்படியாக இந்த நாள் இனிய நாள் இரவு இப்போது. யூடியூபில் தலை அஜித்தின் ஆரம்பம் பார்த்தபடி இந்த தமாம் பாலாவின் ராஜ பார்வையை நிறைவு செய்கிறேன், நன்றி வணக்கம் சகோஸ்!

January 27, 2025

மூடுபனி

மூடுபனி
தமாம் பாலா

2025ம் ஆண்டு பிறந்தே விட்டது, 2024 ஐ ஓட ஓடத் துரத்திவிட்டு. ஜனவரி இறுதியில் வியட்நாமிய சந்திரப் புத்தாண்டு. 10 நாட்கள் விடுமுறை, சென்னை சென்று குடும்பத்தினரை சந்திக்கலாம் என்ற நினைப்பே தனித் தெம்பு.

சொல்லி வைத்தது போல ஊருக்குக் கிளம்பும் வரை வேலையில் கடைசி நேர அழுத்தங்கள் இருப்பது இயல்பான ஒன்று. வெள்ளிக் கிழமை அதிகாலை 2.30க்கு இண்டிகோ விமானம், சைகான் முதல் கல்கத்தா வரை. தொடர் விமானமும் சென்னை வரை இன்னொரு இண்டிகோ தான்.

ஊருக்குப் பெட்டி கட்ட முதல் சனி ஞாயிறு நாள் குறித்திருந்தேன். சனி காலையில் தாய்லாந்து ஆலோசகர் சோம் பாப் வந்ததால் அரைநாள் அலுவலக வேலை. மதியம் எங்கள் குழுமத்தின் ஆண்டு விழா, ஒன்றே குலமென்று பாடினேன் மேடையில். எவ்வளவு புரிந்ததோ தெரியவில்லை, மரியாதைக்கு பூங்கொத்து கொடுத்து ரசித்தனர்.

ஞாயிறு அலுவலகம் இல்லை. ஆனால் அபூர்வமாக வியட்நாமிய வாஸ்து நாள் என்று அலுவலகத்தில் வழிபாடு. குட்டிப் பன்றிமேல் கத்தி குத்தி வைத்து, கெட்டியான அரிசிப் பொங்கல் வைத்து அதன் பெயர் சோய், குலோப்ஜாமூன் போல் பல பருப்பு உருண்டைகள் கலர் கலராய், உள்ளே இனிப்பு.

ஊதுவர்த்தி ஏற்றி, குழுமத் தலைவர் முதல் எல்லோரும் வரிசையில் நின்று வணங்கினோம். காகித அட்டையில் செய்த குதிரை, வீடு என பல ஜிகினா சரக்குகளை சொக்கப்பானை கொளுத்தி சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தோம்.

அதன் பின் வழக்கம் போல மோத், ஹாய், பா, யோ என்று (1,2,3 குடி) ஹைனிக்கன் பியர் பிரசாத விநியோகம் முடிந்தது. திங்கள் முதல் வியாழன் வரை மொரிசியசு நாட்டில் இருந்து எங்கள் வாடிக்கையாளர் வருவதாக என் சகா அன் தெரிவித்தான்.

திங்கள் வழக்கம் போல் முழுநாள் அலுவலகத்தில். மாலை அட்டைப் பெட்டியில் அகப்பட்டதைப் போட்டு பிள்ளையார் சுழி போட்டேன். செவ்வாய் கிழமை மொரிசியசு நாட்டவர் இருவர் தரிசனம். ஒருவர் கொஞ்சம் வெள்ளைக் காரர் ஜாடை, இன்னொருவர் சற்று கறுத்த நிறம் கொஞ்சம் சுருட்டைமுடி இருவரும் நாற்பது வயதுகளில், சுறுசுறுப்பாய் இருந்தனர்.

கறுத்தவர் ஆப்பிரிக்கர் போல் இல்லாமல் இந்தியர் போல் தோற்றம். கண்கள் வசீகரமான பூனைக்கண். எங்கேயோ பார்த்தது போல் பழக்கமான மனிதர் போல் தோற்றம், யார் என்று பின்னர் சொல்கிறேன்.

அவர்களுக்கு பகலில் குழுமத்தை, தொழிற்சாலையைக் காட்டினோம். இரவில் ஹோசிமின் நகரத்தின் பாரம்பரிய உணவையும் உறங்கா நகரத்தின் புயிவியன் தெருவின் இரவு வாழ்க்கையையும் காட்டினோம்.

இரு இடங்களில், உணவு மற்றும் உற்சாக பானத்துடன் லைவ் பேண்ட் என்று சொல்லும் ஆங்கில இசைக் கச்சேரியும் உண்டு. மொரிசியசு நண்பர்கள் பாடலை ரசித்தனர். கூடவே பிரஞ்சு மொழிப் பாடல் வேண்டும் என நேயர் விருப்பமும் வைத்தனர்.

தொழில்முறைப் பாடகர்கள் பிலிப்பின் நாட்டவர் கைவிரித்து விட்டனர். ஒரு கத்துக்குட்டி பாடகி வியட்நாமியப் பெண் வந்தாள். பிரஞ்சு மொழியும் இசையும் கல்லூரியில் பயில்பவளாம். ஒன்றுக்கு இரண்டாய் பிரஞ்சு பாடலை இசைக்குழுவுடன் பாடி அசத்தி விட்டாள்.

நம் மொரிசியசு நண்பர்கள் மேடையில் ஏறி அவள் பாட்டுக்கு ஆடத் தொடங்கினர். அப்போது தான் அந்த அற்புதம் நிகழந்தது. கறுப்பு அழகன் மறைந்து அங்கே நான் கண்டது நீரும் நெருப்பும் நாளை நமதே கறுப்பு எம்.ஜி.ஆர்! முக சுழிப்பில் கை கால் அசைவில் அச்சு அசல் எம்ஜிஆர் பாணி, அதுதான் பிரஞ்சு பாணியும் போல.

வியாழன் மதியம் இனிதாய் பொழுது கழிந்து மாலை நான்கு மணிக்கு சைகான் சர்வதேச விமான நிலையத்தில் பிரியாவிடை கொடுத்தோம். இரண்டு நாட்கள் இரவுத் தூக்கம் இல்லை தினம் காலை 3 மணி வரை ஆட்டம் பாட்டம். என் கண்கள் தூக்கத்துக்கு ஏங்கி இருந்தன.

ஒரு வழியாய் வீட்டுக்கு வந்து, பின் பக்கத்து அங்காடி தெருவில் ராதிகா என் மனைவி கேட்ட உயிர் மூங்கில் செடிகள் பீங்கான் ஜாடிகள் வாங்கி அட்டைப் பெட்டியில் அடைத்து இரவு 9 மணிக்கு மீண்டும் விமான நிலையம் வந்தேன்.

2 மணி வியட்நாம் நேரம் விமானம் பறந்து 4 மணி இந்திய நேரம் கல்கத்தா வரும். அசந்து தூங்கிப் போனேன், விமானியின் அறிவிப்பு வரும் வரை. நாம் இப்போது கல்கத்தா விமான நிலையம் மேல் பறக்கிறோம்,ஆனால்...

ஆனால் என்ன? இங்கு ஒரே மூடுபனி, சுத்தமாக எதுவுமே தெரியவில்லை. விமானம் தரை இறங்க இது பாதுகாப்பான சூழ்நிலை இல்லை. எனவே நாம் லக்னோவில் தரை இறங்குவோம் என்றார் விமானி.

முதல் நாள் 70 விமானம், அன்று 60 விமானங்கள் மடைமாற்றப் பட்டதாக பின்னர் கூகுளில் அறிந்த்தேன். லக்னோவில் 5 மணி நேரம் விமானத்துக்கு உள்ளேயே இருந்ததால் பயணிகள் சத்தம் போட ஆரம்பித்து விட்டனர். நான் அறிவிக்கப் படாத ஐநா சபை உறுப்பினராக அவர்களை கொஞ்சம் சமாதானம் செய்து வைத்த்தேன்.

சக பயணியாய் ஒரு விசாகப்பட்டினப் பையன் வந்தான். சைகானில் ஆங்கில ஆசிரியனாம், அன்பாய் அவனே பேசினான் அதிசயம் ஆனால் உண்மை. தற்கால முப்பதுக்கும் குறைந்த இளைஞர் முகம் கொடுத்துப் பேசுவது இல்லை.

வளைகுடா நாட்களில் இந்தியர் தமிழர் கண்டால் இங்கிதமாய் பேசுவோம். வியட்நாமில் வாழும் இந்தியர் பெரிய மனிதர், தொழிலதிபர் மற்றும் தலைமை அதிகாரி மட்டுமே, தொழிலாளர் இல்லை. நாம் சிரித்தால் பதிலுக்கு சிரிக்க மிகவும் யோசிப்பார்கள். சொத்தில் பாதி எழுதி வாங்கி விடுவானோ என்ற பயம் கண்ணில் தெரியும். 

ஒரு வழியாய், கல்கத்தா பனி மூட்டம் விலகி, லக்னோவில் இருந்து பறந்து அங்கு இறங்கினோம். அடித்துப் பிடித்து அடுத்த விமானத்தில் சென்னை சேர்ந்தேன். இண்டிகோ திணறி விட்டது கூட்டத்தை சமாளிக்க. வர வர விமான நிலையம் தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்ட் போல சந்தைக் கடையாய் ஒரே பிஸி ஆகி விட்டது. பதிவை முடிக்கிறேன், நன்றி வணக்கம்.