December 28, 2024

இரு கோடுகள் 2

இரு கோடுகள் 2
தமாம் பாலா


முதல் பச்சை ரேகைக்கு முன்பே ஒன் ப்ளஸ் வேறு விதமான தொந்தரவை ஆரம்பித்து இருந்தது. அதில் இருந்த இரு சிம்களில், ஒரு எண் காலையில் தொடர்பு அறுந்து போய் விடும். வீட்டில் வைஃபை இருப்பதால் எதுவும் தெரியாது. வெளியே போனதும் டேட்டாவும் கிடைக்காது, தொலைபேசி இணைப்பும் கிடைக்காது. பின் வைத்து சிம் அட்டைகளை வெளியே எடுத்து திரும்ப போட்டதும் எல்லாம் சரியாகி விடும. தினம் தினம் இதே ரகளை தான். 

ஒரு நாள் காலை தெருவில் குழுமத்து வண்டிக்காக தொழிற்சாலை செல்ல காத்திருந்தேன். சிம் சொதப்பலுடன். அக்கம் பக்கத்தில் பின் பின் என்று நான் புலம்ப, கடைக்காரர் சார்ஜரைத் தந்தார். அப்போது தான் வியட்நாமில் பின் என்றால் பேட்டரி, மின்கலம் என தாமதமாக உறைத்தது.

கைபேசியில் பச்சைக் கோடு பார்த்ததும் எனக்கு கர்மா நினைவுக்கு வந்தது. வியட்நாமி சக ஊழியன் ஹாவ் கைபேசியில் நிறைய கோடுகளை நான் ஒரு நாள் பார்த்தேன். நண்பா, உலகத்தில் ஸ்கான் கோடு பார் கோடு கொண்ட கைபேசி என கிண்டல் அடித்தேன். அது இப்போது பூமராங் ஆக எனக்கேவா என கொஞ்சம் வலித்தது.

கூகுளில் திரைக் கோடு தேடிய போது என்னைப் போல் பலர் அவதிப்படுவது தெரிந்தது. இதை நீக்க, திரையை மாற்ற வேண்டும் பதினைந்தாயிரம் ரூபாய் ஆகலாம் என்று ஒருவர் பதிவிட்டு இருந்தார். விற்றாலும் புதியது வாங்கினாலும் அவ்வளவு ஆகாது. இதற்கு இடையில் யூடியூபில், டெவலப்பர் ஆப்ஷனில் செட்டிங் மாற்றி கைபேசியை ஒரு முறை அணைத்து மீண்டும் திறந்தால் சரியாகும் என ஒரு ஆரூடம் கண்டேன், செய்தும் பலன் ஏதும் இல்லை. பச்சை ஒளிரேகை இப்போது இன்னும் பெரிதாய் போனது போல தோற்றம்.

அடுத்த ஒரு வாரத்துக்கு ஒரு கோட்டை கண்டும் காணாமல் வாழ்ந்திருந்தேன். ஒன் ப்ளஸ் என்னடா இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான் என அடுத்த சுற்றுக்கு தயாரானது.

பார்த்துக் கொண்டிருக்கும் போதே கைபேசியில் இரண்டாவது கோடு! இது பூமத்திய ரேகையை செங்குத்தாய் போட்டது போல் நீள வாக்கில், முதல் கோட்டை விட இரட்டை தடிமனில். திரையில் இருந்த ராஜ அலங்கார முருகரை அர்த்த நாரீஸ்வரர் போல இரண்டாகப் பிளந்து விட்டது போல். அதற்கும் நான் அசரவில்லை கைபேசியை தொடர்ந்து பயன்படுத்தினேன். அப்போது அடுத்த தாக்குதல் வந்தது. 

கைபேசியில் மத்தியில் கைரேகை பதிவு உண்டு லாக் இன் செய்ய, வங்கி பண பரிவத்தனை செய்ய. நேர் வகிடு கைரேகையை கெடுத்து விட்டது வேலை செய்யாமல் தடுத்து விட்டது.

கைரேகை பொத்தானில் இருப்பது சாதாரணம், திரையில் இருப்பதே உசிதம் என்று கதை விட்ட யூடியூபரை சபித்தேன். இது போன்ற கோடுகள் ஓ எல் டி திரைக்கு மட்டுமே சாத்தியமாம். எல்சிடி டிஃப்டி டிஸ்ப்ளேயில் வராதாம். அதற்காக, வீட்டை குளிர்காய கூரையை எரிக்க முடியுமா என்ன?

கைபேசியை புதிதாக வாங்கி விட வேண்டியது தான். இரண்டு கடன் அட்டை வைத்து சவுதி வாழ்வில் மதிய உணவு நேரத்தில் புதுப் புது கைபேசி வாங்கிய என் அட்டகாசங்கள் கண்முன் வந்து சென்றன.

நிறைய புது மாடல், 4ஜியா 5 ஜியா குழப்பம் வேறு. கொஞ்சம் அடக்கி வாசிப்போம் என்று 2 மில்லியனுக்கு (வியட்நாம் டாங் நம் ஊருக்கு ஆறாயிரம் வரும்) ஏ73 5ஜி கைபேசி வாங்கினேன். இது கடையில் 256 ஜிபி காட்டியது போலியாய், வீட்டுக்கு வந்ததும் தான் 4ஜி மாடல் தான் ஓ எல் டி 5ஜி மாடல் எல் சி டி தான் அதுவும் 128 ஜிபி தான் என்ற உண்மைகள் வெளி வந்தன.

ஒரு வழியாய், அலுவல் பணிகளுக்கு ஒப்போ ஒத்துழைத்தது சாதாரண கைபேசியாய் இருந்தாலும். இரண்டு நாள் கழித்து ஓ எல் டிக்கு கண் ஏங்கியது, எனக்கே கிறிஸ்மஸ் பரிசாக ஒரு பழைய கைபேசி கடைக்கு சென்றேன், அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

கைக்கு அடக்கமாய், தெளிவான திரையுடன் கொஞ்சமாய் அடி வாங்கிய ஒரு கைபேசி கிடைத்தது. ஓ எல் டி தான், எல்ஜி வி30 ஆம். அந்த கம்பெனி தொலைக் காட்சிப் பெட்டியில் சாம்சாங்கின் போடியாளர். கைபேசி தொழிலை கைவிட்டு மூன்றாண்டு ஆகி விட்டது.

ஆனால் கைபேசியின் படம், கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். ஒலிப் பதிவுகள் ஒலி அமைப்புகள் அபாரம். கைபேசியை பெரும் ஒலிபெருக்கியில் இணைத்தால் கூட துல்லியமான தெளிவான ஒலி!

ஒரு ரூபாய் கொடுத்தால் நூறு ரூபாய் அளவுக்கு நடிக்கிறான் என்பது போல், சந்தையை படிக்காமல் சிந்து பாடிய எல்ஜி கடையை மூடியதில் வியப்பேதும் இல்லை.

ஒன் ப்ளஸ் இப்போதும் உயிருடன் தான் இருக்கிறது, ஒரு காமராவாக யூடியூப் பதிவுக்கு மட்டும். இந்த பதிவை எழுதும் போது லாசடா இணையத் தளத்தில் என் பழைய காதலியைக் கண்டேன். ஆம், சாம்சங் நோட் 10 தான் அவள். 2019-20ல் கூடவே நோட் 10+ வந்ததால் கை நழுவிப் போனவள் அவள் 10 மில்லியன் விலை அன்று. இன்று 2.6 மில்லியனுக்கு ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பாய் அவள்!

நோட் 10 4ஜி காமராவுக்கு முன் இன்றைய 5ஜி கைபேசிகள் ஜுஜுபி. கண்ணை மூடிக் கொண்டு இணையத்தில் செலுத்தி விட்டேன், டிசம்பர் 31 அன்று அஞ்சலில் வரும், வந்ததும் என் அடுத்த பதிவும் வரும்.

நண்பர்களே, ஒரு மனைவி, இருகோடுகள், மூன்று கைபேசிகள் என்று எனது கதை தொடரும். கைபேசி இல்லாத 2000 ஆண்டுக்கு முன் காலம், தமிழ் திரைப் பாடல் போல் குழந்தையாய் குழப்பம் ஒன்றும் இல்லாத பொற்காலம். இரு கோடுகள் இணைந்து முடிந்தன, நன்றி வணக்கம்!!

இரு கோடுகள் 1

இரு கோடுகள் 1
தமாம் பாலா


இன்று சனிக்கிழமை, வியட்நாம் சைகான் என்ற ஹோசிமின் நகரில். வழக்கமாக அரைநாளுக்கு வீட்டில் இருந்து வேலை செய்வேன். ஆனால் தாய்லாந்தில் இருந்து ஸோம்பாப் வந்திருக்கிறார். அவரைக் காண வேண்டும் வேலை நிமித்தமாய். ஆகவே அலுவலகம் வந்து கட்டுமான ஒப்பந்தம் வாங்கிக் கொண்டு பேருந்தில் இதை எழுதுகிறேன். இதற்கு முன் 2022 ல் தோய் அன் பதிவும் இப்படித்தான்.

2024ம் ஆண்டு ஓடிவிட்டது. இன்னும் மூன்று நாளில் 2025 பிறந்து விடும். கைபேசியும் கணினியுமாய் இந்த ஆண்டும் சென்றது. மெய்நிகர் வாழ்வில் வேலை தொழில் குடும்பம் கேளிக்கை எல்லாமே வாசப்பூ தான் (வாட்ஸ் அப்). தினமும் பகலில் வேலை செய்வதும், இரவில் இந்தியா அழைப்பதும் ஸ்டார் மேக்கரில் கரோக்கி பாடுவதும் யூடியூபில் வியட்நாம் வீடு வர்த்தகம் வணிகம், பாலாவின் ஜோதிட நேரம் பதிவதுமாய் நாட்களை பறக்க விட்டுக் கொண்டு இருக்கிறேன்.

இந்த சந்திர வருட விடுமுறையில், ஆஷிகா பயன்படுத்தி பின் கைமாற்றிய சாம்சங் மடக்கு கைபேசியோடு சென்னை சென்றேன். எப்போது புதிய உருப்படி பார்த்ததும், இந்தா பாப்பா என தனது பழைய பொருளை தங்கையிடம் தந்து விடுவான் ஆகாஷ். அது இன்றும் தொடர்கிறது. ஒன் பிளஸ் எட்டு டி அவனிடமிருந்து எனக்கும் என் சாம்சங் அவனுக்கும் கூடு விட்டு கூடு பாய்ந்தன.

கிட்டத்தட்ட ஆறுமாதம் ஒன்று கூட்டல் கைபேசி எனக்கு ஈடு கொடுத்து வந்தது. ஓ எல் டி திரை 5000 அலகு மின்கலம் என்று அடிப்படையில் நல்ல கட்டமைப்பு. ஒன்றுக்கு இரண்டாய் பின்கவசமும் லாசடாவில் ஆர்டர் செய்து கவனிப்பு செய்தேன். இங்கு வியட்நாம் கடைகளில் ஐபோனுக்கு மட்டுமே மரியாதை, ஆண்ட்ராய்டு கிலோ என்ன விலை என்பார்கள்.

இரவு உறங்கும் போது கைபேசிதான் படுக்கைத் துணை. கட்டிலின் ஓரத்தில் இருந்த அது, நள்ளிரவில் கை பட்டு தரையில் விழுந்தது. பச்சை கவசத்தை விலக்கிப் பார்த்ததில் ஒரே அதிர்ச்சி, பின்பக்க கண்ணாடி தெரு கிரிக்கெட் பந்து பட்ட வீட்டு ஜன்னல் போல் சிதறி, ஒட்டிய நெகிழியில் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நின்றது. முன் பக்கமும் அதே நிலைதான். நெகிழியைப் பிரிக்க பயந்து விட்டு விட்டேன்.

அப்படியே ஒரு மாதம் போனது. ஒரு நாள் காலை விடிந்து பார்க்கையில், கைபேசித் திரையில் வலது முக்கால் பங்கில் முழுநீளத்துக்கு மெல்லிய ஒரு பச்சை ஒளிக்கோடு!